திருநெல்வேலி: நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையப்பர் சுவாமி சன்னதி முன் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டு காலை 5.30 முதல் 6.30 மணிவரையிலும் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிப்ரவரி 3ம் தேதி நான்காம் திருநாளான நெல்லுக்கு வேலியிட்ட விழா நடைபெறுகிறது. இதில் வேதபட்டர் நெல்லையப்பர் கோயில் முன்பாக நெல்மணிகளை காயப்போட்டுவிட்டு செல்வதும், மழையில் நெல் நனைவதும், பின்னர் இறைவன் தோன்றி நெல்லை காத்ததால் திருநெல்வேலி என பெயர் காரணமான திருவிளையாடல் நிகழ்வினை கோயில் சிவாச்சசாரியார்களால் மேற்கொள்வார்கள். இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி- அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது. பிப்ரவரி 9ம் தேதி தைப்பூசச தீர்த்தவாரி விழா, கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெறும். தீர்த்தவாரியில் கலந்து கொள்ள நண்பகல் 12.30 மணிக்கு கோயிலில் இருந்து நெல்லையப்பர், காந்தி மதி அம்மன், அகஸ்தியர், குங்குலியக் கலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகள் தாமிரபரணி கரையில் தீர்த்தவாரியில் பங்கேற்பர். பின்னர் மகா தீபாராதனை நடைபெறும்.மாலை 6 மணிக்கு சிந்துபூந்துறை மண்டபத்திலிருந்து புறப்பட்டு சுவாமி நெல்லையப்பர் கோயிலுக்கு வந்து சேரும். 10ம் தேதி சசவுந்திர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடனக் காட்சி நடைபெறவுள்ளது. 11ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோயில் வெளித் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.