பதிவு செய்த நாள்
01
பிப்
2017
11:02
கோவை : கோனியம்மனுக்கு புதியதாக தேர் செய்யும் பணிகள் நிறைவடையும் தருவாயிலுள்ளன. பிப்., 13ல் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது. கோவையின் காவல் தெய்வமாக கோனியம்மன் விளங்குகிறது. இக்கோவிலின் தேர், பழுதடைந்து சில பகுதிகள் சிதிலமடைந்திருந்தன. புதிய தேர் செய்வதற்கான பணிகளை துவக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகம், தேர் செய்ய, அறநிலையத்துறை ஸ்தபதியை கொண்டு, 21.5 லட்சம் ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்தது. அதன் அடிப்படையில் கோவில் கட்டளைதாரர்கள், கீர்த்திலால் நிறுவனம், மகாகணபதி ஜூவல்லர்ஸ், பிந்துபாலு ஆகியோர் இணைந்து, 21.5 லட்சம் ரூபாயை தேர் அமைக்கும் பணிக்கு செலவிட ஒப்புக்கொண்டனர். புதிய தேர் செய்யும் பணிகள் ராஜவீதியிலுள்ள தேர்நிலைத்திடலில் கடந்த சில மாதங்களாக நடந்தன; தற்போது நிறைவடையும் தருவாயிலுள்ளது. பிப்., 12ம் தேதி பணிகள் நிறைவடைந்து, 13ல் வெள்ளோட்டத்துக்கு தயாராகிவிடும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தேர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெரம்பலுாரை சேர்ந்த வரதராஜன் கூறியதாவது: கோனியம்மன் தேர், 42 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேரில், 5.5 அடி உயரத்தில் சக்கரங்கள், 242 சிற்பங்கள், 220 போதிகள் என்றழைக்கப்படும் உருவ பொம்மைகள் செதுக்கப்பட்டுள்ளன. தேரின் முன்பக்கம் இரு குதிரைகள் சவாரி செய்வதை போல் அமைக்கப்பட்டுள்ளன. தேர் மொத்தம் ஐந்து அடுக்குகளாக அமைந்துள்ளது. முதல் அடுக்கு, பத்மாசனம்; இரண்டாம் அடுக்கு நடாசனம்; மூன்றாம் அடுக்கு, விட்டாரமட்டம் (மேற்பரப்பு) பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. தேவாசனம் என்றழைக்கப்படும் நான்காம் அடுக்கு, சிம்மாசனம் என்றழைக்கப்படும் ஐந்தாம் அடுக்குப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அனைத்துப்பணிகளும், ஓரிரு நாட்களில் முடிந்து விடும். வண்ணப்பூச்சு, வார்னீஷ் பூச்சு உள்ளிட்ட பணிகள் மட்டுமே நடைபெற உள்ளது. தேர் உருவாக்கும் பணியில், 28 பேர் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். கோவில் நிர்வாகம், கோவை நகரில் தேர் வெள்ளோட்டம் விடுவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக பொதுப்பணித்துறை மற்றும் போலீஸ், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை அறநிலையத்துறை கோரியுள்ளது. தேர்த்திருவிழாவில் தேர் பவனி வருவதைப்போல், புதிய தேர் பிப்., 13ல் வெள்ளோட்டம் வரவுள்ளது.