பதிவு செய்த நாள்
01
பிப்
2017
11:02
திருச்சி: திருச்சியில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு கோவில் கட்டி, வெள்ளிக்கிழமை தோறும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. தினமும், இந்த கோவிலுக்கு, பலரும் பக்தர்களாக வந்து கும்பிட்டுச் செல்கின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த, தனியார் நிறுவன உரிமையாளர் புஷ்பராஜ். சிறுவயது முதலே, அப்துல் கலாமால் ஈர்க்கப்பட்டவர். அவரின், கனவு காணுங்கள் என்ற வார்த்தை புஷ்பராஜை வெகுவாக கவர்ந்துள்ளது. அப்துல் கலாமை தனது மானசீக குருவாகவே ஏற்று செயல்பட்டு வந்துள்ளார். அப்துல் கலாம் மறைவு, புஷ்பராஜை கடுமையாக பாதித்துள்ளது. அவரது நினைவைப் போற்றும் வகையில், தன் நிறுவனத்தின் வாசலில், கலாமுக்கு கோவில் கட்ட முடிவு செய்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம், ஒரு லட்சம் ரூபாய் செலவில், அப்துல்கலாமுக்கு சிறிய அளவிலான கோவில் ஒன்றை கட்டி, அதில் அவரது மார்பளவு சிலையை வைத்து, கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். அவரும், அவரது நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும், தினமும், கலாமின் சிலைக்கு முன் நின்று வணங்கி விட்டு தான், பணி செய்ய துவங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே போல், வெள்ளிக்கிழமைகளில் இந்து முறைப்படி தேங்காய், பழம் வைத்து, சூடம் ஏற்றி கலாமுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, கலாமை கும்பிட்டு வருகின்றனர். அப்துல் கலாமை பெருமைப்படுத்தும் வகையில், திருச்சியில் பூங்கா அமைத்துள்ள நிலையில், திருச்சியில் ஒருவர் கோவில் கட்டி, அவரை கும்பிட்டு வருவது கலாமை பின்பற்றுபவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.