பதிவு செய்த நாள்
08
பிப்
2017
02:02
திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரன் கோவிலில், இன்று மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதையொட்டி, அதை காண்பதற்காக, ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுரம், சில ஆண்டுகளுக்கு முன், திடீரென இடிந்து விழுந்ததால், 2012ல், கோவிலில் நடக்கவிருந்த கும்பாபிஷேகம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், புதிய ராஜகோபுரம் கட்டும் பணிகள் நிறைவடைந்ததால், பிப்., 8ல், கும்பாபிஷேகம் நடத்த, நாள் குறிக்கப்பட்டது. அதன்படி, கடந்த, 1ம் தேதி முதல், காளஹஸ்தி யில், மூன்று கட்டங்களாக மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இந்த விழா, கருவறை கோபுரங்களின் கும்பாபிஷேகத்துடன் இன்று, நிறைவடைகிறது.இதற்காக கோவிலில் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. நேற்று மாலை கருவறை கோபுரங்கள் மேல், தங்க கலசம் பொருத்தும் பணிகள் முடிவடைந்தன. இன்று காலை நடக்கவுள்ள, மகா கும்பாபிஷேகத்தை காண, ஏராளமான பக்தர்கள், காளஹஸ்தியில் திரண்டு உள்ளனர்.