பதிவு செய்த நாள்
08
பிப்
2017
01:02
திண்டுக்கல்: பழநி தைப்பூசத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக ஒரு டி.ஐ.ஜி., மூன்று எஸ்.பி.,க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 50 பெண் போலீஸ் உட்பட 250 பேர் மாறுவேடத்தில் உள்ளனர். பழநி தைப்பூசம் நாளை (பிப்.,9) நடக்கிறது. இதில் பங்கேற்க அருகே உள்ள மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாட்டு பக்தர்கள் என பல ஆயிரம் பேர் இங்கு வந்து குவிந்து உள்ளனர். அருகில் உள்ள மாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சரண கோஷத்துடன் வந்து கொண்டிருக்கின்றனர்.
மூவாயிரம் போலீசார்: பழநியில் அசம்பாவிதத்தை தடுக்க டி.ஐ.ஜி., கார்த்திகேயன், எஸ்.பி.,க்கள் தேஷ்முக் சஞ்சய்சேகர்(திண்டுக்கல்), ஜெயச்சந்திரன்(சிவகங்கை), பாஸ்கரன்(தேனி) ஆகியோர் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு, காமாண்டோ படையினரும், சிறப்பு புலனாய்வு பிரிவினரும் உள்ளனர்.மாறுவேடத்தில் போலீசார்: பழநிக்கு வரும் பக்தர்களிடம் திருட்டு மற்றும் நகை பறிப்பை தடுக்கவும், சமூகவிரோதிகளை அடையாளம் காணவும் 50 பெண் போலீசார் உட்பட 250 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல குழுக்களாக பிரிந்து பக்தர்கள் போர்வையில் கூட்டத்தில் உலா வருகின்றனர்.“இவர்களிடம் வாக்கி டாக்கி கிடையாது. வெறும் அலைபேசிகளை மட்டும் பயன்படுத்தி, சந்தேகப்படும் நபர்களை பின்தொடர்ந்து சென்று கண்டுபிடிப்பர். பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை” என போலீசார் தெரிவித்தனர்.