பதிவு செய்த நாள்
09
பிப்
2017
02:02
ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள, பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருப்பணிகள் நடந்து வந்தன. இதனை தொடர்ந்து, கடந்த, 7ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேகவிழா துவங்கியது. முதல், இரண்டாம், மூன்றாம் கால யாக வேள்விகள், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சார்த்துதல், நடந்தன. பிரசாத வினியோகம் வழங்கப்பட்டது. இன்று, அதிகாலை, 5:55 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாகவேள்வி, நாடி, சந்தானம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. காலை, 9:35 மணிக்கு விமான கோபுரங்கள் மகா கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் காலை, 10:15 மணிக்கு மாரியம்மன் கும்பாபிஷேகம், குடமுழக்கு தீபாராதனை, காலை, 11:30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கின்றன. மாலை, 5:30 மணிக்கு அம்பாள் புறப்பாடு நடக்கிறது. கும்பாபிஷேக சர்வ சாதகங்களை சரவண குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் மேற்கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.