பதிவு செய்த நாள்
10
பிப்
2017
12:02
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தாயுமானசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ராமநாதபுரம் லட்சுமிபுரம் தாயுமானசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா பிப்.,7 காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் பிப்.,8ல் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜை துவங்கியது. 7:30க்கு பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடந்தது. 7:45 மணிக்கு கடம் புறப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. ராமகிருஷ்ண தபோவன தலைவர் சதானந்த மஹராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சத்யானந்த மஹராஜ் ஆசியுரை வழங்கினார். தேனி சித்பவானந்த ஆசிரமம் ஓம்காரானந்தர் சொற்பொழிவாற்றினார். சினிமா இசையமைப்பாளர் கங்கை அமரன், ராமகிருஷ்ண தபோவன பொருளாளர் பரானந்த மஹராஜ், உபதலைவர் சுத்தானந்த மஹராஜ், ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சாரதானந்தா, தபோவன தொழில் அதிபர் அழகப்பன், ராமமூர்த்தி, சிதம்பரம் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . மாலையில் கங்கை அமரன் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.