பதிவு செய்த நாள்
15
பிப்
2017
11:02
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் நேற்றிரவு நடந்தது. விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மகா தரிசனம் நேற்றிரவு நடந்தது. முன்னதாக காலை, 10:00 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமார சாமிக்கு மகா சிறப்பு அபிஷேகம், நடந்தது. இதை தொடர்ந்து டன் கணக்கான பூக்களைக் கொண்டு, மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர். இரவு, 9:00 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் நான்கு ராஜ வீதிகளிலும், சுவாமிகள் வலம் வந்து, அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் சென்றடைந்தனர். மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தேர் திருவிழா இன்று நிறைவுக்கு வருகிறது. விழாவால், சென்னிமலை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.