பதிவு செய்த நாள்
20
பிப்
2017
11:02
கீழக்கரை: சேதுக்கரை கடலில் சேதமடைந்த சாமி சிலைகளை போட்டுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கரையில் இருந்து கடலுக்குள் 10 அடி வரை சேதமடைந்த சுவாமி சிலைகளை இரவில் கொண்டு வந்து போட்டு செல்கின்றனர். பழமையான கோயில், புதிய கோயில்களை புனரமைப்பு செய்யும் போது, அவற்றில் உள்ள சுவாமி விக்ரகங்களில் சிறிதேனும் சேதம் ஏற்பட்டால், அவற்றை நீர் நிலை, கடல்களில் விட்டு செல்வது மரபு. சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் முன்புறம் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடும் போது, கால்களில் பட்டும், கற்சிலைகள் உடலில் காயம் ஏற்படுத்துகின்றன. தேவகோட்டை பக்தர் ராமானுஜம் கூறுகையில், பக்தர்கள் புனித நீராடும் கடலில், ஏராளமான சேதமடைந்த சுவாமி விக்ரகங்களை போட்டுவிட்டு செல்வதால், குளிக்கும் போது காயம் ஏற்படுகிறது. எனவே கடலோரத்தில் கிடக்கும் சிலைகளை கண்டெடுத்து, ஓரிடத்தில் குவித்து வைக்கவும், விட்டு செல்லும் துணிமணி, குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.