பதிவு செய்த நாள்
20
பிப்
2017
05:02
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது என்னும் பழமொழியுடன் புகழ்பெற்று விளங்குகின்ற ஆன்மீக நகரமாக திகழ்கிறது. அதற்கு காரணம் ஆயிரம் வருடங்கள் கங்கையில் தினம் தினம் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் துலா கட்ட காவேரியில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். காவேரி மகாத்மீயம் என்னும் நூலில், மஹான்களின் பெருமை,துறவிகளின் பெருமை,சாலகிராமத்தின் ஆராதனை மஹிமை, காவேரியின் சிறப்புகள் இவற்றை உபதேசிக்க, கேட்டவர்கள் மஹா பாக்கியசாலிகள், ஜன்மாந்திரங்களின் புண்ணியம் செய்தவர்களுக்கே காவேரியை காணும் பாக்கியம், அதில் ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைக்கும் என்கிறது. மேலும் காவேரி மகாத்மீயம் நதிகளில் உயர்ந்தது காவேரி நதியே என்றும் கூறுகிறது.
கன்ம மகரிஷி என்ற மாமுனிவரை ஒரு நாள் கருத்த நிறத்தில் உள்ள மூன்று மங்கையர்கள் வந்து பார்க்கின்றார்கள். அவர்களிடம் நீங்கள் யார் என்று வினவும் போது தான் கங்கை என்றும், மற்றவர்கள் யமுனை, சரஸ்வதி என்றும் புண்ணிய நதிகள் என்றும், மனிதர்கள் செய்யும் பாவத்தை தங்களிடம் கொட்டி தீர்த்ததனால், தாங்கள் கருமை நிறம் அடைந்துவிட்டதாகவும் தாங்கள் எங்களுக்கு பாவத்தை போக்க வழி வகை செய்திடவேண்டும் என்றும் கேட்டனர். அதற்கு பின், கடும் தபத்தில் ஆழ்ந்து, பின் கண் விழித்த கன்ம மகரிஷி, தாங்கள் மூவரும் தென்பாரத தேசத்தில் உள்ள மாயுரம் நகரில் உள்ள துலா காவேரியில் துலா மாதத்தில் நீராடி, மயூர நாதரையும் , பரிமள ரங்கநாதரையும் தரிசித்து பாவங்களை போக்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அதன்பின் மூவரும் துலா மாதம் மயிலாடுதுறை வந்து புனித நீராடி பாவங்களை தொலைத்து புதிய பொலிவுடன் வடபாரதம் செல்வதாக ஐதீகம் கூறுகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த துலா கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 1ம் தேதி முதல் 30 தேதி வரை தமிழகம் மட்டுமல்லாது பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடுவது வழக்கம். ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் பாவங்களை போக்கிக்கொள்கிறார்கள்.
நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் பிரம்மனை நோக்கி ஒரு வேண்டுதலோடு கடுமையான தவம் மேற்கொள்கிறார். குருவின் கடும் தவ வலிமையை எண்ணி வியந்த பிரம்மன், குருவின் முன்பு தோன்றி குருவே உனது கோரிக்கை தான் என்ன என்று வினவுகிறார். உடனே குருபகவான், பிரம்மா உங்களிடம் உள்ளதைத்தான் நான் கேட்பேன் என்றார், கேளுங்கள் என்றதும் தங்களிடம் உள்ள புஷ்கரத்தை எனக்கு தாருங்கள் என்றார். அப்படியா அப்படியே ஆகட்டும், சரி தருகிறேன் என்றதும், புஷ்கரம் பிரம்மா என்னை உங்களிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள் என்று கெஞ்சியது. அதனால் தர்ம சங்கடமடைந்த பிரம்மன், தான் கொடுத்த வாக்கை பின்வாங்காமல், குருவுக்கும்,புஷ்கரத்திற்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை மேற்கொண்டார் பிரம்மன். அதனையேற்று செயல்பட இருவரும் ஒப்புக்கொண்டனர். அதாவது புஷ்கரம், குருபகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசிவரை உள்ள 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பாலிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி புஷ்கரம் மேஷம்-கங்கை, ரிஷபம்-நர்மதை, மிதுனம்-சரஸ்வதி, கடகம்-யமுனை, சிம்மம்-கோதாவரி, கன்னி-கிருஷ்ணா,துலாம்-காவேரி, விருச்சிகம்-தாமிரபரணி, தனுசு- சிந்து,மகரம்-துங்கபத்திரா, கும்பம்-பிரம்மபுத்திரா, மீனம்-பரணீதா ஆகிய நதிகளில் குருபகவான் எந்தெந்த ராசிகளில் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன் அதே காலக்கட்டத்தில் பிரம்மா.விஷ்ணு,சிவன்,இந்திரன் ஆகியோரும் ஒருசேர இருந்து மக்களுக்கு அருள்பாலிக்கவும் செய்வார்கள். மேற்படி நாட்களில் மக்கள் இப்புனித நதிகளில் நீராடினால் அனைத்துவகை துன்பங்கள் நீங்கி வளமையும் செழிப்பும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது தான் புஷ்கரத்தின் மகிமையாகும். அதன்படி வருகிற 2017ம் ஆண்டு காவேரி புஷ்கரம் என்னும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாநிகழ்வு ஆண்டாகும்.
காவேரி புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு மாறும் குருபெயர்ச்சி காலம். எதிர்வரும் செப்டம்பர் 12ல் 2017ல் நடைபெறவுள்ளது. அதுவும் குறிப்பாக துலா ராசிக்குரிய காவேரியில் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டதில் அன்று முதல் 12 நாட்கள் காவேரி புஷ்கர புண்ணிய காலம். இதனை ஆதி புஷ்கரம் என்று அழைப்பார்கள். அடுத்தஆண்டு குரு பெயர்ச்சி நடைபெறும் முன் உள்ள 12 நாட்களை அந்தி புஷ்கரம் என்று அழைப்பார்கள். மேற்படி தினங்களில் காவேரியில் நீராடுவதால் பலவகை தோஷங்கலான பிதுர் தோஷம்,ஹத்தி தோஷம்,நதி தோஷம் நீங்கி, வறுமை,பஞ்சம் அகன்று, செழுமையடைந்து உலகம் சுபிட்சம் பெரும். குறிப்பாக கன்னி,துலா,விருச்சிக ராசியுடையோர் புனித நீராடுவதால் நல்ல பலன்களை பெறுவது அவசியம். மேற்படி காவேரி புஷ்கர ஆண்டு 2017 நிகழ்வுகள் மயிலாடுதுறையில் உள்ள துலா கட்டத்தில் நடைபெற உள்ளதால், அதற்கு ஏதுவாக நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிச்சாமி அவர்கள் கடந்த மாதம் துலாக்கட்ட படித்துறைகளை பார்வையிட்டார்கள், தொடர்ந்து பக்தர்கள் துலாக்கட்ட படித்துறைகளை சீரமைக்கவும்,, காங்கிரீட் தடுப்பணைகள் இருபுறமும் அமைத்து நீரை தேக்கி பக்தர்களின் நம்பிக்கை வீண் போகாமல் ஏற்பாடுகளை செய்திடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரும் அரசின் கவனதிற்கு கொண்டு சென்று உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ள நிலையில், விழாவின் முன்னேற்றம் குறித்து ஆலோசனைகளும் அதன்படி செயல்பாடுகளும் மிகவும் அவசியமானதாகும். அதற்காக விரிவாக ஆலோசனை கூட்டம் வரும் 22-2-2017 புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள், தலைமையில் நடைபெறவுள்ளது. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் பங்கேற்கிறார்கள். அப்போது மேற்படி புஷ்கர நாட்களில் மயிலாடுதுறையில் நடத்திடவேண்டிய பூஜைகள், சிறப்பு யாகங்கள், ஆரத்திவழிபாடுகள், வருண ஜபம், பெண்கள் குத்துவிளக்குபூஜைகள், ஆன்மீக கருத்தரங்குகள், துறவியர் ஊர்வலம் மற்றும் இதர ஆன்மீக நிகழ்வுகள்,ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் அகில பாரத துறவியர் பேரவையின் செயலாளர் சுவாமி ராமானந்தா மகாராஜ் அவர்கள், காவேரி புஷ்கர ஒருங்கிணைப்பாளர், திருப்பணி செம்மல் சென்னை திருமதி மஹாலட்சுமிஅம்மையார், காவேரி புஷ்கர விழாக்குழுவினர்கள் முன்னாள் எம். எல். ஏ. ஜெகவீரபாண்டியன், G.C. முத்துகுமாரசாமி, ஸ்ரீ வீரராகவசுவாமிகள், அ.அப்பர்சுந்தரம், S.சீத்தாராம ஐய்யர், வெங்கட்ரமணன், C.செந்தில்வேல், P.N.ரெத்தினகுமார், காசிவெங்கடேசன், ATS.தமிழ்செல்வன்,ஜோதிபிரகாஷ், NS.ராஜேந்திரன், L.ராஜேந்திரன், கோபாலகிருஷ்ணன் ஜி, கைலாஷ் சந்த்ஜெயின், மகாகாவேரி சந்திரசேகரன் மற்றும் குழுவினர்கள், பக்தர்கள் ஆன்மீக சான்றோர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்க மயிலாடுதுறை, பூம்புகார், கும்பகோணம், திருவையாறு, திருச்சி, கரூர், ஈரோடு,தர்மபுரி, ஓசூர் போன்ற காவேரி வழிந்தோடும் நகரங்களில் உள்ள ஆன்மீக அன்பர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க மயிலாடுதுறை காவேரி புஷ்கர குழுவினர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
The above message from
அ. அப்பர்சுந்தரம்,BSc, DIPLOMA (JOURNALISM),
சமூக ஆர்வலர்,
காவேரி புஷ்கரம் 2017 விழாக்குழு.