பதிவு செய்த நாள்
21
பிப்
2017
12:02
செங்கல்பட்டு: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சார் - ஆட்சியர் உத்தரவிட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் மார்ச், 1 முதல், 14ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதற்கான பணிகள் தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு சார் - ஆட்சியர் (பொறுப்பு) கிள்ளி சந்திரசேகர் தலைமையில், நேற்று முன்தினம், நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: வருவாய் துறை: விழா சிறப்பாக நடைபெற, ஆலோசனைகள் வழங்கி, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.காவல் துறை: வரும் 1 முதல் 14ம் தேதி வரை, தினமும், காலை மற்றும் இரவு நேரங்களில், சுவாமி வீதியுலாவின்போது, ஐந்து போலீசார் இருக்கவும்; 3 மற்றும் 4ம் தேதி, பரணி கார்த்திகை மற்றும் 8ல், திருத்தேர் விழாக்களில், ஒரு லட்சம் பக்தர்கள் வருவர் என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த, சட்டம் - ஒழுங்குக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
நான்கு மாடவீதிகளிலும், திருத்தேர் சுற்றி வரும் வழியில் இருக்கும் நடைபாதை கடைகள் அப்புறப்படுத்த வேண்டும். விழா காலங்களில், கோவில் வரை வாகனங்களை அனுமதித்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், சென்னை பகுதியில் இருந்து வரும் வாகனங்களை, வணிகர் வீதி, திருவஞ்சாவடி தெரு, நல்லான்செட்டி குளம் பகுதியிலும்; மாமல்லபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்களை, சான்றோர் வீதியில் நிறுத்தப்படும்.
தீயணைப்பு துறை: தேர் திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா நாட்களில், ஒரு தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனத்தை, கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்க வேண்டும். மின்சார துறை: விழா துவங்கும் நாளிலிருந்து, தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யவும், மின்மாற்றிகளை உரிய முறையில் பராமரித்து வைத்திருக்கவும், மாட வீதிகள், சன்னிதி வீதியில் குறுக்கே செல்லும் மின் இணைப்புகளை சரி செய்து, எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
பேரூராட்சி: கிழக்கு மாடவீதியில் கான்கிரீட் சாலை பழுதடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதை சரி செய்யவேண்டும். தேரடி தெருவின், பாதாள சாக்கடை மூடி சரிசெய்வது; தாழ்வாக உள்ள சன்னிதி தெருவை கான்கிரீட் மூலம் உயர்த்துவது; கிழக்கு மாட வீதியில் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பழைய குடிசையை அகற்ற வேண்டும்.
கிழக்கு மாடவீதி - நெம்மேலி சாலை சந்திப்பில் பாதை ஓரத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கற்களை அகற்ற வேண்டும். சாலையை ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ள கட்டுமானங்கள், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதை அப்புறப்படுத்த வேண்டும். மாட வீதிகளை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சன்னிதி தெரு, கிழக்கு மாடவீதி, சபாபதி பத்தர்தெரு, சன்னதி சந்து தெரு பகுதிகளில், குடிநீர் தொட்டிகள் அமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரை பக்தர்களுக்கு வழங்க வேண்டும். தேவையான இடங்களில், கழிப்பறைகள் அமைக்க வேண்டும். சுகாதாரத்துறை: விழா துவங்கும் நாளிலிருந்து முடியும் வரை, தற்காலிக மருத்துவமனை ஏற்படுத்தி, முதலுதவி வழங்கவும், 8ம் தேதி மட்டும், அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கவேண்டும். போக்குவரத்துத் துறை: வரும், 3, 4ம் தேதிகளில், பரணி, கார்த்திகை மற்றும் 8ல், தேர் திருவிழா ஆகிய நாட்களில், திருப்போரூருக்கு, செங்கல்பட்டு, மாமல்லபுரம், சென்னை கோயம்பேடு, பிராட்வே, தாம்பரம், அடையாறு ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் அல்லது கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும். வரும், 25ம் தேதிக்குள், அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.