பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாம் நாளில் வரும் வளர்பிறை அஷ்டமி திதி மிகவும் விசேஷமானது. ஸ்ரீராமநவமிக்கு முதல்நாள் இந்த நாள் வரும். இதை அசோகாஷ்டமி என்பர். சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் இன்பம். இந்த திதியன்று விரதமிருந்தால். துன்பம் நீங்கி இன்பம் பிறக்கும். அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களை பயிர் செய்யலாம். மருதாணி மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம். முட்கள் இல்லாமல் ஏழு மருதாணி இலைகளைபறித்து கையில் வைத்துக் கொண்டு, மருதாணிமரமே! உனக்கு அசோகம் (துன்பத்தைபோக்குபவன்) எனப்பெயர். மது என்னும் வசந்த காலத்தில் நீ உண்டாகி இருக்கிறாய். உனது அருளைப் பெறுவதற்காக உனது இலைகளைச் சாப்பிடுகிறேன். பலவிதமான துன்பங்களால் சிரமப்படும் எனக்கு, வசந்த காலம் போல் இன்பம் தந்து, என்னைப் பாதுகாப்பாயாக, என்று சொல்லி வழிபட வேண்டும். பிறகு அந்த இலைகளை மென்று சாப்பிட வேண்டும். இதனால் நோய்களும், நோய் ஏற்பட காரணமான பாவமும் விலகும்.