பதிவு செய்த நாள்
06
மார்
2017
04:03
திருக்கோட்டியூர் நம்பி பிறந்த மறு ஆண்டு அழகர் கோயில் என்ற திருமாலிருஞ்சோலையில் மாசி மகத்தில் அவதரித்தவர் திருமாலையாண்டான். வைணவ குலத்தைச் சார்ந்த இவரது பெற்றோர், ஞானபூர்ணர் என்று பெயரிட்டனர். இவருடைய முன்னோரில் ஒருவர் கண்ணுக்கினியான் என்பவர். இவர் காலத்தில் மாலிருஞ்சோலை அழகர் கோயிலுக்கு சில மலையாள மாந்திரிகர்கள் கண்களில் மந்திர மையிட்டு வந்து அழகரின் சக்தியை அபகரிக்க திட்டமிட்டனர்.
இதை உணர்ந்த சுவாமி அவர்களுக்குக் கொடுத்த பிரசாதத்தில் மிளகை அதிகமாகச் சேர்த்துவிட, மலையாள மாந்திரிகர்கள் கண்ணில் நீர் பெருக்கு ஏற்பட்டு, அவர்களின் கண்ணில் இருந்த மாந்திரிக மை கரைந்து, அவர்களின் குற்றம் வெளிப்பட்டது. அவர்களுக்கு தண்டனையும் கிடைத்தது. எனவே கண்ணுக்கினியான் ஸ்வாமிக்கு, திருமாலை காப்பாற்றியவர் என்ற பெயரும் ஆண்டான் என்ற பட்டப்பெயரும் ஏற்பட்டது.
இன்றளவும் அவ்வம்சத்தினருக்கு திருக்கோயிலில் முக்கியப் பணிகள் அமைந்துள்ளது. இவர் தம் திருமகனாரான சுந்தரத் தோளுடையானை ராமானுஜரின் சீடராக்கினார். இவரது சீடரே யமுனாச்சாரியார் என்ற ஆளவந்தார். இவர் அருளிய கிரந்தங்களில் பிரமேய ரத்னம் என்ற கிரந்தம் வைணவத்தில் மிகவும் மதிப்புடையதாக விளங்குகிறது. திருமாலையாண்டானிடம்தான் ராமானுஜர், நம்மாழ்வாரின் திருவாய் மொழி பற்றி அறிந்தார். இவரின் திருவுருவத்தை திருமாலிருஞ்சோலையில் தரிசிக்கலாம்.