பதிவு செய்த நாள்
09
மார்
2017
12:03
திண்டுக்கல் நகரின் காவல் தெய்வம் கோட்டைமாரியம்மன். வரலாற்றுச் சிறப்பு மிக்க திண்டுக்கல்லின் மேற்கில் பத்மகிரி என்னும் மலையும், அதன் மீது கோட்டையும் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோட்டை மீது திப்புசுல்தான் படைவீரர்கள் தங்கியிருந்தனர். அதில் இருந்த சிப்பாய் ஒருவருக்கு கனவில் மாரியம்மன் காட்சியளித்து, தன்னை வழிபடும் படி கட்டளையிட்டார். அதன்படி, அம்மனைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு தொடங்கியது.
கோட்டை மாரி: மலைக்கோட்டையின் பின்னணியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோட்டையால், அம்மனும் கோட்டை மாரியம்மன் என்று பெயர் பெற்றார். அமர்ந்த கோலத்தில் அம்மன் எழிலுற வீற்றிருக்கிறாள். எட்டுக் கைகளுடன் காட்சி தரும் அவளின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம் ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு ஆகியவையும் உள்ளன. அம்மன் சிலை பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்தும் உள்ளது.
பரிவார தெய்வங்கள்: சன்னதியின் உள்புறத்தில் நுழைவாயில் கம்பத்தடி தாமிரத்தால் ஆனது. அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம் விநாயகரும், வடக்கில் மதுரை வீரன், முன்புற வடக்கில் நவக்கிரகம், பின்பக்கம் தென்புறம் முனீஸ்வரர், வடபுறம் கருப்பணசாமி சன்னதிகள் உள்ளன. காளி, துர்க்கை சன்னதியும் உள்ளது.
நேர்த்திக்கடன்: அம்மை, உடல் குறைபாடு, வயிற்றுவலி போன்ற நோய் நீங்க அம்மனை வழிபடுகின்றனர். பரிகாரமாக மஞ்சள், உப்பினை கொடி கம்பத்தடியில் இடுகின்றனர். கொடி ஏற்றும் போது பெண்கள் புனித நீர் அபிஷேகம் நடத்துவர். இதன் மூலம் அம்மனின் கோபம் தணிந்து பக்தர்களுக்கு நன்மை அருள்வதாக ஐதீகம். வேண்டுதலால் குழந்தை வரம் பெற்றவர்கள் கரும்புத் தொட்டிலில் பிள்ளையைச் சுமந்தும், கண் நோய் நீங்க மாவிளக்கு ஏற்றி கண்களில் வைத்தும் வழிபடுகின்றனர்.
மாசித் திருவிழா: மாசி அமாவாசை முடிந்த 5-ம் நாள் கொடி ஏற்றப்பட்டு 20 நாள் விழா நடைபெறும். விழா காலத்தில் பலலட்சம் பக்தர்கள் அம்மனை தரிசிப்பர். சிம்மம், ரிஷபம், குதிரை என தினமும் மாரியம்மன் வாகனத்தில் காட்சியளிப்பார்.
கண்ணனின் தங்கை: யமுனை நதிக்கரையில் இருந்த மதுராபுரியை கம்சன் ஆண்டு வந்தான். அவனது தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் அழிவு ஏற்படும் என்று அசரீரி வாக்கு ஒலித்தது. இதையறிந்த கம்சன் தங்கையையும், அவளது கணவர் வசுதேவரையும் சிறை வைத்தான். பின், மகாவிஷ்ணுவே தேவகியின் எட்டாவது புத்திரன் கண்ணனாக அவதரித்தார். அதே சமயத்தில், யமுனையின் மறுகரையில் இருந்த கோகுலத்தில், வசுதேவரின் நண்பர் நந்தகோபனின் மனைவி யசோதைக்கு மாயாதேவி என்ற பெண் குழந்தை பிறந்தது. இவளும் திருமாலால் உருவாக்கப்பட்டவள். அப்போது வானத்தில் அசரீரி ஒலித்தது. “வசுதேவரே! கண்ணனை கோகுலத்தில் உள்ள உன் நண்பர் நந்தகோபனிடம் பத்திரமாகச் சேர்த்துவிடு!” என்றது. ஒரு கூடையில், கண்ணனை எடுத்துக் கொண்டு வசுதேவர் கோகுலம் சென்று நந்தகோபன் வீட்டில் விட்டார். மாயாதேவியை அதே கூடையில் வைத்து சிறைக்கு கொண்டு வந்தார். கம்சன் தன் தங்கைக்கு குழந்தை பிறந்த விஷயத்தை அறிந்து, அதைக் கொல்ல சிறைக்கு வந்தான். பச்சிளங் குழந்தையை கையில் துõக்கிக் கொல்ல முயன்றான். ஆனால், அவன் பிடியிலிருந்து நழுவிய மாயா விண்ணை நோக்கிப் பறந்தாள். “ஏ மூடனே! ஹம்சா! உன்னைக் கொல்லப் போகும் என் அண்ணன் கண்ணன் கோகுலத்தில் வளர்கிறான். உலக உயிர்களை எல்லாம் காக்க மாயாதேவியாக பூமியில் அவதரித்திருக்கிறேன்” என்றாள். அவளே மாரி, காளி, பவானி, துர்க்கை என்ற திருநாமங்களில் அருள்பாலிக்கிறார்.