திருப்பரங்குன்றம் கோயிலில் ஏடு கொடுக்கும் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2017 10:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 8ம் நாள் திருவிழாவாக சிவகாமி அம்பாளுக்கு நடராஜர் ஏடு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் மார்ச் 4ல் துவங்கிய பங்குனித் திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். நேற்று காலை விடையாத்தி சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக புறப்பாடாகி, வீதி உலா நிகழ்ச்சி முடிந்து, கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். தீபாராதனைகள் முடிந்து நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை, சிவாச்சார்யார்கள் பெற்று, சிவகாமி அம்பாளிடம் சேர்ப்பித்தனர்.திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டப்பட்ட இரவு சுவாமி பச்சைக் குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது.பட்டாபிஷேகம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 16ல் நடக்கிறது. அதற்கு முன் நிகழ்ச்சியாக மார்ச் 14ல் சூரசம்ஹாரம், மார்ச் 15ல் பட்டாபிஷேகம் நடக்கிறது.தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்: மார்ச் 17ல் நடக்கும் தேரோட்டத்திற்காக, கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத்தேரில் மராமத்து பணிகள் துவங்கின.