பதிவு செய்த நாள்
13
மார்
2017
12:03
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில், நாளை இரவு, பூச்சாட்டுதலுடன் குண்டம் தேர்த்திருவிழா துவங்குகிறது. ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள் என, காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில் ஆகியன உள்ளன. இக்கோவில்களின் திருவிழா நாளை (14ம் தேதி) இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. வரும், 18ல் இரவு, 8:30 மணிக்கு பட்டாளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 10:30 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 22ல் இரவு, 10:30 மணிக்கு கிராமசந்தி, 23ல் மாலை, 5:00 மணிக்கு கொடியேற்றம், 28ல் அதிகாலை, 5:30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் பூ மிதித்தலும், இரவு, 9:00 மணிக்கு மாவிளக்கு, கரகம், பெரிய மாரியம்மன் விசேஷ அலங்காரத்துடன் திருவீதியுலா நடக்கிறது.
வரும், 29ல் பொங்கல் விழா காலை, 9:30 மணிக்கும், சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடித்தலும், மாலை, 4:00 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்தலும், 30ம் தேதி மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், இரவு, 9:30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதியுலாவும், 31ம் தேதி மாலை, 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்து, சின்ன மாரியம்மன் சன்னதி நிலை சேர்தலும், இரவு, 9:30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதியுலாவும், இரவு, 10:00 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதியுலா நடக்கிறது. ஏப்.,1ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, கம்பங்களை எடுத்து மஞ்சள் நீர் விழாவுடன், வழக்கப்படி காரை வாய்க்காலில் விடுதலும், 2ம் தேதி காலை, 10:30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. திருவிழாவுக்காக பிரப் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் பந்தல் அமைத்தல், பிரப் ரோட்டில், 48 கடைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.