பதிவு செய்த நாள்
02
நவ
2011
10:11
திருடனை விரட்டிச் சென்ற பேராசிரியர், கல்லறைத் தோட்டத்தில் நுழைந்து கல்லறை ஒன்றில் அமர்ந்துக் கொண்டார். இதற்கான காரணத்தை உடன் வந்தவர்கள் கேட்க, திருடன் என்றைக்காவது ஒரு நாள் இங்கு வந்துதானே ஆக வேண்டும் என்றார். ஆம்... எல்லோரும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும். மரணத்திற்கு வேற்றுமை பாராட்டத் தெரியாது. சூதுவாது இல்லை. மரணத்தை எப்படி சந்திப்பது, ஏற்றுக்கொள்வது என்பதை நினைவூட்டும் நாள்தான் இன்று. இறந்தோரை நினைவுகூறுவதற்கும், எதிர்கால பேரின்பத்தை எண்ணிப்பார்த்து, அவர்களுக்காக மன்றாடுவதற்கும், வாழ்பவர்கள் தங்கள் வாழ்வை சீராக்குவதற்கும் இந்நாள் உதவுகிறது. கத்தோலிக்க மரபின்படி, இறப்பு பல கொள்கைகளை நம் கண்ணில் கொண்டு வருகிறது. இறப்பு வாழ்வின் முடிவல்ல. அழிவல்ல. வேறொரு வாழ்வின் ஆரம்பம். இறப்பு முழுமையான அர்ப்பணம் வாழும்போது சிறிது சிறிதாக நம்மை இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டே வருகிறோம். இறப்பின்போது முழுமையாக நம்மை அளித்துவிடுகிறோம். என் வார்த்தையை கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டர்கள் என்று சாவுக்கு சாவுமணி அடித்த இயேசுவின் உயிர்ப்பு, நம் வாழ்விற்கும், சிறப்பிற்கும் தெளிவான வார்த்தை தருகிறது.வாழ்வு ஒரு கலை. இறப்பும் அப்படித் தான். வாழும்போது பிறருக்காக வாழ்பவர்கள், இறப்பைப் பற்றி துக்கப்பட மாட்டார்கள். வாழ்வை மகிழ்வோடு அனுபவித்தவர்களால் மட்டுமே இறப்பையும் அதே உணர்வோடு சந்திக்க முடியும். இறந்தவர்கள் பிறருக்காக மன்றாடுகிறார்கள். அவர்களுக்காக திருச்சபை, பரிந்து பேசவும், உதவி செய்யும் வகையில், நமக்கோ விண்ணகமே தாய்நாடு என்ற இலக்கை அடைய நம்மை அழைக்கிறது.