பதிவு செய்த நாள்
31
மார்
2017
12:03
கோபி: பச்சமலையில், 40 அடி உயர செந்தில் ஆண்டவர் சிலையில், விரிசல் விழுந்துள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பச்சமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. ஆண்டுக்கு, 33 லட்சம் ரூபாய் வருவாய் பெரும் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில், படிக்கட்டு வழியாக பக்தர்கள் வரும் வழியில், வலது புறத்தில் படி மண்டபம் அருகே, 40 அடி உயரத்தில் செந்தில் ஆண்டவர் சிலை கட்டப்பட்டுள்ளது. வடுகபாளையத்தை சேர்ந்த முருக பக்தர் ஒருவர் உபயத்தால், 2002 மார்ச், 6ல் திறப்பு விழா கண்டது. ஐந்து அடி உயரத்தில் மயிலும், தண்டம் மற்றும் வேலாயுதத்தை கையில் ஏந்தியபடி சிலை உள்ளது. திறப்பு விழாவுக்கு பின் சிலையை, இந்து சமய அறநிலையத்துறை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் சிலையின், கை, முதுகு, குன்று ஆகியவற்றில் விரிசல் விழுந்துள்ளது. அனல் பறக்கும் வெயிலில், ஏற்கனவே விழுந்த விரிசல், மேலும் அதிகரித்து வருகிறது. முறையாக பராமரிக்காவிடில், சிலை கட்டமைப்பு வலுவிழந்து, நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளதாக, முருக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிலை முழுக்க பெயிண்ட் மற்றும் பராமரிப்பு பணி செய்ய, குறைந்தபட்சம் மூன்று லட்சம் ரூபாய் செலவாகும். சிலையை சுற்றி சாரம் அமைக்க, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும். சம்பந்தப்பட்ட உபயதாரரிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.