கருணையுள்ளம் கொண்டவள் மீனாட்சி: சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள் அருளுரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2017 12:04
மதுரை: அன்னை மீனாட்சி எல்லையில்லா கருணையுள்ளம் கொண்டவள். அனுதினமும் அம்பாளை வணங்கிட சகல நன்மைகளும் பக்தர்களிடம் வந்து சேரும், என சிருங்கேரி சங்கர மடம் பாரதீ தீர்த்த சுவாமிகள் அருளுரை வழங்கினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி நேற்று மாலை வந்தனர். தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். பாரதீ தீர்த்த சுவாமி பேசியதாவது: மதுரைக்கும், சங்கர மடத்திற்கும் நுாற்றாண்டு தொடர்பு உண்டு. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எனது ஆச்சாரியாருடன் 1957 ல் வந்தேன். அவருடன் சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜையில் கலந்து கொண்டேன். தொன்று தொட்டு குருமார்களும், ஆச்சாரியார்களும் மீனாட்சி அம்மன் கோயிலில் சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை செய்து வருவது பாரம்பரியமாக நடக்கும் சம்பிரதாயங்களில் ஒன்றாக விளங்குகிறது. எனது ஆச்சாரியாருக்கு பின் நானும் மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்து வருவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். சீடர் (விதுசேகர பாரதீ சுவாமி) பூஜைகளை சிறப்பாக செய்து வருவார்.
அன்னை மீனாட்சி எல்லையில்லா கருணையுள்ளம் கொண்டவள். அனுதினமும் அம்பாளை வணங்கிட சகல நன்மைகளும் பக்தர்களிடம் வந்து சேரும். மீனாட்சியின் கடைக்கண் பார்வை கிடைப்பதிருப்பது மதுரை மக்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம், என்றார். மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்றிரவு சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜையை சுவாமிகள் நடத்தினர். பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இன்று (ஏப்.,4) காலை 11:00 மணிக்கு சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை, தரிசனம், பிஷா வந்தனம், பாதுக பூஜை, தீர்த்த பிரசாதம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு அம்மன் சன்னதி சிருங்கேரி மடத்தில் இருந்து சுவாமிகள் ராஜபாளையம் புறப்படுகின்றனர்.