பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
03:04
சேலம்: கோட்டை பெருமாள், ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ராமநவமி விழா, நேற்று துவங்கியது. அதையொட்டி, அதிகாலை, 6:00 மணிக்கு பூஜை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. 6:00 மணிக்கு, அழகிரிநாதருக்கு, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு, முத்தங்கி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 15 வரை சிறப்பு பூஜை நடக்கிறது. அதேபோல், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள், குமரகுரு சுப்பிரமணியர், சின்ன திருப்பதி வெங்கடாஜலபதி ஆகிய கோவில்களில், சிறப்பு பூஜை, அலங்கார ஆராதனை நடந்தது.
திருமணம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் எதிரே உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த, 28 முதல், நேற்று வரை, ராமர், சீதைக்கு தினமும் பூஜை நடந்தது. நேற்று காலை, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 9:30 மணிக்கு, ராமர் சீதை திருக்கல்யாணம் நடந்தது.
தங்கக்கவசம்: ஆத்தூர், கம்பர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், வீர ஆஞ்சநேயர் மற்றும் ராமர் பாதத்துக்கு, காலை, 8:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின், வீர ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டது. மேலும், வடை, வெற்றிலை, துளசி மாலைகள் அணிவித்து, மகா தீபாராதனை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.