பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
03:04
அஸ்தம்பட்டி: சேலம், குமாரசாமிப்பட்டி, எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா, கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி நடக்கிறது. நேற்று முன்தினம் மா விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை, பொங்கல் வைபவம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்ககான பெண்கள், பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். பலர், அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மதியம், 3:00 மணிக்கு அக்னி குண்டம் இறங்குதல் நடக்கிறது. நாளை காலை, பால் குட ஊர்வலம், மாலையில் வண்டி வேடிக்கை நடக்கிறது. ஏப்., 8 இரவு சத்தாபரணமும், 9 மஞ்சள் நீராட்டு விழா, 10ல் குத்து விளக்கு பூஜை நடக்கிறது.
* பெரியகிருஷ்ணாபுரம், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில், நேற்று காலை, 6:00 மணியளவில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, உருளுதண்டம், கோழி பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 12:00 மணிக்கு பூங்கரகம் மற்றும் மாவிளக்கு எடுத்து, ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். மாலை, 6:00 மணிக்கு மேல், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். இன்று இரவு, 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் சுவாமி திருவீதி நடக்கிறது. நாளை, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
* சேலம், நைனாம்பட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த, 22ல், கம்பம் நடப்பட்டு விழா துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, பூங்கரக ஊர்வலத்தையொட்டி, ஆத்துப்பிள்ளையார் கோவிலில் இருந்து பூங்கரகம் எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். இன்று காலை, 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு நைனாம்பட்டி முனியப்பனுக்கும், இரவு, 7:00 மணிக்கு, மாரியம்மனுக்கும் பொங்கல் வைத்து வழிபாடு நடக்கும். நாளை இரவு, சத்தாபரண ஊர்வலம், ஏப்., 8ல், மஞ்சள் நீராட்டு விழா, 9ல், கம்பம் கங்கையில் சேர்த்தலுடன் விழா நிறைவடைகிறது.
* ஜலகண்டாபுரம் அடுத்த, சூரப்பள்ளி பஞ்சாயத்து, கோட்டைமேடு கரியகாளியம்மன் மற்றும் மாரியம்மன் திருவிழாவில் நேற்று ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர்.