பதிவு செய்த நாள்
07
ஏப்
2017
12:04
அனுப்பர்பாளையம் : பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், கொடியேற்றம் நடைபெற்றது. திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில், புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, குண்டம் திருவிழா, கடந்த, 14ல் துவங்கி நடைபெற்று வருகிறது; 11ல், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக, இரவு, 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நாகராஜ் குருக்கள் தலைமையில், ஈஸ்வரன் கோவில் வீதியில், கிராமசாந்தி நடத்தப்பட்டது. அங்கிருந்து, மேளதாளத்துடன் கோவிலுக்கு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜையை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி, கோவில் அருளாளிகள், பக்தர்கள், காப்பு கட்டினர். அஷ்டதிக் பாலகர் வழிபாடு, அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7:30க்கு, அம்மன் திருவீதி உலா; இரவு, 7:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம், புறப்பாடு உள்ளிட்டவை நடந்தது. விழாவில், இன்று காலை அம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சங்கரசுந்தரேசுவரன், தக்கார் அழகேசன் செய்து வருகின்றனர்.