பதிவு செய்த நாள்
07
ஏப்
2017
02:04
கோவை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.
மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா, மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,4 அன்று, அதி மூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு, வெள்ளி ரிஷப வாகன திருக்காட்சியும், அறுபத்து மூவர் திருக்காட்சியும் நடந்தன. நேற்று முன் தினம் அதி மூர்க்கம்மன் திருத்தேரில் எழுந்தருளினார், தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வெள்ளை யானை மீது சுவாமி, எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று காலை, 9:00 மணிக்கு, மலர்கள், பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட, பஞ்ச மூர்த்திகள், திருத்தேரில் எழுந்தருளுவிக்கப்பட்டனர். தேரில் எழுந்தருளிய சுவாமி அம்பாள், சோமாஸ்கந்தர், விநாயகர், முருகர் ஆகியோரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை, 4:15 மணிக்கு, பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், இளையபட்டம் மருதாசல அடிகளார், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக சுவாமிகள் ஆகியோர் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் மைதானத்திலுள்ள தேர்நிலையிலிருந்து வடம் பிடித்து இழுக்கப்பட்ட தேர், கோவை – சிறுவாணி சாலை வழியாக, மேற்குரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக கோவில் தேர்நிலையை அடைந்தது. முதலில் பட்டீஸ்வரர் தேர், தொடர்ந்து அம்மன் தேர், விநாயகர், முருகர் தேர் ஆகியவை அணிவகுத்துச்சென்றன. செல்லும் வழியெங்கும் ‘ஓம் நமச்சிவாயா ’ என பக்தர்களின் கோஷம் விண்ணதிர முழங்கியது. இன்று இரவு, 8:00 மணிக்கு வேடுபரி உற்சவமும், குதிரை, கிளி வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்வும் நடக்கிறது. நாளை இரவு, 8:00 மணிக்கு, இந்திர விமான தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. ஏப்.,9 அன்று அதிகாலை, 3:30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும், பங்குனி உத்திர தரிசன காட்சியும் நடக்கிறது.