பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
12:04
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நேற்றிரவு நடத்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்மன் தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் பங்குனி உத்திரதிருநாளன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். இந்தாண்டும் கடந்த 1ந்தேதியன்று கொடியேற்றத்துடன் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவவிழா துவங்கி, தினமும் மண்டபம் எழுந்தருளல் மற்றும் வீதியுலா நடந்தது.
நேற்று காலை செப்புத்தேரோட்டம் முடிந்தபின்னர் கண்ணாடி மண்டபத்தில். ஆண்டாள்,ரெங்கமன்னார் எழுந்தருளினர். பின்னர் காலை 10 மணிக்கு கோட்டைத்தலைவாசல் ரேணுகாதேவி கோயிலிலிருந்து திருக்கல்யாணப்பட்டு புடவை, வேஷ்டி, திருமாங்கல்யம் பெறபட்டு கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது மதியம் 3 மணியளவில் ரெங்கமன்னார் வீதி புறப்பாடும், வேதபிரான் பட்டர் சமாவர்தன தேங்காய் பெற்று, பூரண கும்பத்துடன் பெரியாழ்வார் எழுந்தருளலும் நடந்தது. மாலை 4 மணிக்கு ஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பட்டு மாலைமாற்றுதலும் நடந்தது.
இரவு 7 மணியளவில் ஆடிப்பூர பந்தலில் அமைக்கபட்டிருந்த மணமேடையில் ஆண்டாள்,ரெங்கமன்னார் எழுந்தருளினர். கோவிந்தராஜ் பட்டர் தலைமையில் பட்டர்கள் வாசுதேவன், ரகு, சுதர்சன், வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து, பெரியாழ்வார் முன்னிலையில் கல்யாணம் நடந்தது. பின்னர் திருப்பதி கோயிலிலிருந்து கொண்டுவரபட்ட வஸ்திரங்கள் சாற்றபட்டது.
மணவாள மாமுனிகள் மட ஜீயர் சுவாமிகள், மதுரை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன்,நீதிபதி வசந்தி, தக்கார் விசந்திரன், எஸ்.பி.ராஜாராமன், வேதபிரான் அனந்தராமன், அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன்.
துணை ஆணையர் ஹரிஹரன், செயல் அலுவலர் ராமராஜ், ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆண்டாள்,ரெங்கமன்னாரை தரிசித்து மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு ஆகிய பிரசாதங்களை பெற்றனர். சங்கேரஸ்வரன் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.