பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில், அக்னிச்சட்டி மற்றும் மின்சார தீப தேரோட்டம் நடந்தது. பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஏப்., 2ல் கொடியேற்றத்துடன் பங்குனித்திருவிழா தொடங்கியது. அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். மேலும் அனைத்து நாட்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், முக்கிய நிகழ்வாக நேற்று காலை 9:00 மணி முதல் வைகை ஆற்றில் இருந்து ஏராளமானோர் வேல் குத்தியும், தீச்சட்டிகளை ஏந்தியவாறும் வந்தனர். இவர்களை வழி நெடுகிலும் பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து மாலை 6:00 மணி வரை அக்னிச் சட்டி ஊர்வலம் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடந்தது. பின், இரவு 8:15 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி மின்தீப தேரில் எழுந்தருளினார். அப்போதுமேள, தாளம், தாரை, தப்பட்டைகள் முழங்க அம்மன் தேர் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்தது. ‘சக்தி’ கோஷம் விண்ணை முட்ட பக்தர்கள் தேரை இழுத்தனர்.