பழநி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் ஐந்து நாட்கள் நிறுத்தப் பட்ட தங்கரத புறப்பாடு மீண்டும், நாளை (ஏப்.,12) முதல் வழக்கம்போல் நடைபெறும்.பழநி பங்குனி உத்திர விழா திருஆவினன்குடிகோயிலில் ஏப்.,3ல் கொடியேற்றத்துடன் துவங்கி நாளை(ஏப்.,12) வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று, சென்னையை சேர்ந்த 350 பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து தீர்த்தக் காவடி எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பத்தாம் நாளான நாளை இரவு 7:00 மணிக்கு முத்துக் குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கிரிவீதியில் திருவுலா வருகிறார்.இரவு 9:00 மணிக்குமேல் கொடியிறக்குதல் நடைபெறும். இரவு 11 :00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பெரியநாயகியம்மன் கோயிலுக்கு புறப்படுகிறார். பங்குனி உத்திர விழாவையொட்டி மலைக்கோயிலில் ஏப்.,7 முதல் 11:00 வரை நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடு, நாளை முதல் வழக்கம்போல் இரவு 7:00 மணிக்கு நடைபெறும்.