பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
01:04
திருத்தணி: கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருத்தணி, முருகன் கோவிலின் உபகோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த, 8ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, விசேஷ சந்தி மூன்று கால யாகபூஜைகள் நடந்ததன. நேற்று, காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும் யாத்ரா தானம் மற்றும் கலச ஸ்தாபனம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் மேல் அமைத்துள்ள புதிய விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின், பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், திருத்தணி பெரிய தெரு பஜனை குழுவினர் முருகன் பக்தி பாடல்கள் பாடினர். கும்பாபிஷேக விழாவில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, மாஜி சேர்மன்கள் சவுந்தர்ராஜன், ரவி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக விழா நடைபெறுகிறது.