பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
12:04
ஊட்டி : ஊட்டி, குன்னூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாக்கள் இன்று நடக்கின்றன.
ஊட்டி மாரியம்மன் கோவிலில், ஒரே பீடமான நீலாம்பிகை பீடத்தில் மாரி, காளி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். தமிழகத்தில் இங்கு மட்டுமே இத்தகைய சிறப்பு உள்ளது.
இந்த கோவிலில், நடப்பாண்டுக்கான சித்திரை தேர்திருவிழா, மார்ச், 17ல் பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கி நடந்து வந்தது. நாள்தோறும் பல்வேறு ஆன்மிக அமைப்பினர், உபயதாரர்கள் சார்பில் அம்மன் தேர்த்திருவிழா நடத்தப்பட்டது. விழாவில், ஆதிபராசக்தி, ராஜராஜேஸ்வரி, தேவி கருமாரியம்மன், மீனாட்சியம்மன், சிக்கம்மன், மாளிகைபுரத்து அம்மன், அம்பாபவானி, மகாலட்சுமி, மூகாம்பிகை, கொடுங்களூர் அம்மன், வடிவாம்பிகை, திரிசூலநாயகி, பூப்பல்லக்கு, புவனேஸ்வரி, ராஜகாளியம்மன், பட்டத்தரசியம்மன்,ஹெத்தையம்மன், சரஸ்வதி, அங்காளம்மன், திருவளர்நாயகி, ராமலிங்க சவுடேஸ்வரி,தையல் நாயகி, மகாமாரி, பகவதி அலங்காரங்களில் அம்மன் தேர்பவனி வந்தார். முக்கிய தேர்த்திரு விழாவான இன்று (18ம் தேதி), மதியம், 1:55 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது. நாளை (19ம் தேதி ) நீலாம்பிகை அம்மன் அலங்காரத்தில் ஊர்வலம் நடக்கிறது. 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
இவ்விழாவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
* குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில், 65வது ஆண்டு திருத்தேர் உற்சவ விழா, இன்று நடக்கிறது. இதை தவிர, காலை, 9:00 மணிக்கு வி.பி., தெருவில் இருந்து ஆஞ்சநேயர் ராவணனை வதம் செய்யும் விஸ்வரூபங்கள் ஊர்வலம், சிங்காரி மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், காலாட்டம், அம்மன் ஆட்டம், கருப்பசாமி ஆட்டம், பேண்ட் வாத்தியம், மங்கள இசை உடன் அலங்கார ஆராதனை நிகழ்ச்சி மேள தாளங்களுடன் கோவிலை வந்தடைகிறது.
பகல், 12:00 மணிக்கு திருத் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தேர் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து நள்ளிரவில் கோவிலை வந்தடைய உள்ளது. ஏற்பாடுகளை பல்வேறு ஆன்மிக அமைப்புகள் செய்து வருகின்றன.