பதிவு செய்த நாள்
08
நவ
2011
11:11
பத்தனம்திட்டா : சபரிமலை பக்தர்கள் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ள இன்சூரன்ஸ் வசதி, மேலும் பல இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் தெரிவித்தார். கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இவ்வாண்டுக்கான மண்டல பூஜை வரும், 16ம் தேதி துவங்க உள்ளது. சபரிமலை, பம்பை பகுதிகளில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, இங்குள்ள பிரஸ்கிளப்பில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் எம்.ராஜகோபாலன் நாயர் கூறியதாவது: சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, இன்சூரன்ஸ் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம், எருமேலி-பம்பை வனத்தினூடே செல்லும் பாதை, குமளி, சத்திரம், புல்மேடு, பாஞ்சாலிமேடு, பருந்துப்பாறா பகுதிகளிலும் விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. சபரிமலையில், வியாபார நிறுவனங்கள், கட்டடங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, ஆறு ஏக்கர் பரப்பளவில் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பையில் மூன்று ஓட்டல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சபரிமலை சன்னிதானத்திலும் ஓட்டல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாண்டித்தாவளம் பகுதியில், 30 ஆயிரம் சதுரடி பரப்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் ஒரு ஓட்டல், ஒரு இளநீர் கடை, சிற்றுண்டி சாலைகள் ஆகியவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் பல வியாபார நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காததன் மூலம் தேவஸ்வம் போர்டுக்கு இவ்வாண்டு, 20 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்படும். பம்பை-சபரிமலை பாதையில் ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும், கியூ காம்ப்ளக்ஸ் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ராஜகோபாலன் கூறினார்.