பதிவு செய்த நாள்
09
நவ
2011
10:11
மதுரை : சபரிமலை சீசன் துவங்க உள்ள நிலையில், இப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளை பாதுகாக்க, பக்தர்களின் ஒத்துழைப்பை கேரள வனத்துறை பெரிதும் எதிர்பார்த்துள்ளது. நவ., 17ல் கார்த்திகை முதல் தேதியை தொடர்ந்து மகரஜோதி உற்சவம் வரை சபரிமலைக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதி, பெரியாறு புலிகள் காப்பகமாக கேரள வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. யானை, புலி என அனைத்து வகை காட்டு விலங்குகள் இங்கு உள்ளன. லட்சக்கணக்கான வாகனங்கள் மற்றும் பக்தர்கள் வருகையால், பெரும்பாலான வனவிலங்குகள் இந்த சீசன் காலங்களில் இடம்பெயர்ந்து விடுகின்றன. பக்தர்களால் வீணாக்கப்பட்ட உணவுகளை உண்பதற்காகவும் விலங்குகள் இந்த வனப்பகுதிகளில் சுற்றிவரும். வனத்துறையின் கணக்குப்படி கடந்த ஆண்டு 2 கோடி பக்தர்கள் இங்கு வந்துள்ளனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தான் அதிக பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசன் முடிந்ததும் பக்தர்களால் வீசிஎறியப்பட்ட பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் பல டன் இந்த வனப்பகுதியில் சேர்ந்து விடுகிறது. இந்த குப்பைகளால் தீவிபத்துகள் மட்டுமின்றி பிளாஸ்டிக் பைகளோடு இருக்கும் உணவுகளை சாப்பிட்ட விலங்குகளும் பலியாகியுள்ளன. இதனால் வனப்பகுதிக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளுடன் வரவேண்டாம், என வனத்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை எடுத்து வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தீ விபத்துகளை தடுக்க வனப்பகுதியில் சமையல் செய்யாமலும், பீடி, சிகரெட்டையும் தவிர்க்க வேண்டும், என்றார். சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், தங்கள் மனதை, உடலை விரதங்களுடன் ஆரோக்கியமாக வைத்திருந்து இறைவனை தரிசித்து மனநிறைவு பெறும் அதே நிலையில், நாட்டின் பொக்கிஷமாக கருதப்படும் இயற்கையின் வளத்திற்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் ஆன்மிக பயணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதை கேரள வனத்துறை இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்துள்ளது.