பதிவு செய்த நாள்
03
மே
2017
12:05
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று, அர்ச்சுனன் தபசு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம், 20ம் தேதி, தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில், மூலவருக்கு சந்தனக் காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு, மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திரவுபதியம்மன் திருக்கல்யாணம், கடந்த மாதம், 26ம் தேதியும், சுபத்திரை திருமணம், 28ம் தேதியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, கோவில் வளாகத்தில், அமைக்கப்பட்ட மரத்தில், அதிகாலை, 4:30 மணிக்கு அர்ச்சுனன் ஏறி, சிவபெருமானை நினைத்து தவம்புரிந்து பாசிபதம் பெற்றார்.தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வரும், 7ம் தேதி காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.