பதிவு செய்த நாள்
09
நவ
2011
10:11
கும்மிடிப்பூண்டி : பல்லவ காலத்து சிவன் கோவில் ரகசிய அறையை உடைக்கும் பணி, போலீஸ் பற்றாக்குறை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட தெய்வநாயகி உடனுறை சந்திரசேகரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் வள்ளி சுப்பிரமணிய தெய்வானை சன்னிதிக்கும், அதனை அடுத்துள்ள தெய்வநாயகி அம்மன் சன்னிதிக்கும் இடையே, 6 அடி அகலம், 15 அடி நீளத்தில் முழுவதும் அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பதை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். நேற்று காலை ரகசிய அறையை உடைத்து, ஆய்வு நடத்த இந்து அறநிலையத் துறையினர் முடிவு செய்திருந்தனர். போலீஸ் பாதுகாப்பிற்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., குமாரிடம் ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்திருந்தனர். திட்டமிட்டபடி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பத்மநாபன் தலைமையில், மண்டல ஆய்வாளர் உதயகுமாரி, செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகியோர் கொண்ட குழு நேற்று காலை கோவிலுக்கு வந்தனர். ஆனால், பாதுகாப்பு பணிக்கு போலீஸ் ஒருவரும் வரவில்லை. "பந்தோபஸ்து பணிக்காக போலீசார் சென்றுள்ளதால் போதிய போலீசார் இல்லை என கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., குமார், கடைசி நேரத்தில் தெரிவித்தார். இதையடுத்து ரகசிய அறையை உடைக்கும் பணி வருகிற, 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரகசிய அறையில் உள்ளவை குறித்து, ஆய்வு மேற்கொள்ள வந்த அறநிலையத்துறையினர், அறையில் உள்ளவை குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமாக கூடியிருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.