பதிவு செய்த நாள்
11
மே
2017
01:05
ஆர்.கே.பேட்டை: மகாபாரத திருவிழாவில், நேற்று முன்தினம், கண்ணபிரானின் சகோதரி சுபத்திரையை அர்ச்சுனன் கரம் பிடித்தார். பக்தர்களின் ஆனந்த கொண்டாட்டத்துடன் கல்யாண ஊர்வலம் நடந்தது. ஆர். கே. பேட்டை அடுத்த , வங்கனுாரில், மகாபாரத திருவிழா, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திங்கள்கிழமை திரவுபதியம்மன் திருக்கல்யாணமும், நேற்று முன்தினம், சுபத்திரை திருக்கல்யாணம் என, கிராமத்தில் தொடர்ந்து கெட்டி மேளம் சத்தம் கேட்டது. இரண்டு நாட்கள் நடந்த திருக்கல்யாண வை பவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆனந்த கூத்தாடினர். எல்லையில்லா உற்சாகம் கரை புரண்டு ஓடியது. நேற்று முன்தினம், இரவு, 7:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், அர்ச்சுனனுக்கு, சுபத்திரையை கண்ணபிரான் முன்னின்று திருமணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து, கண்ணபிரான், போத்துராஜா மற்றும் பாண்டவர்கள் புடைசூழ, கல்யாண ஊர்வலம் நடந்தது. ஏழு பல்லக்குகளில் சுவாமி சிலைகளை பக்தர்கள் சுமந்து வந்தனர். கிராமத்தினர் கல்யாண கோலத்தில் வலம் வந்த சுபத்திரைக்கு ஆரத்தி எடுத்து வணங்கினர். இன்று, அர்ச்சுனன் தபசு நடைபெற உள்ளது.