ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடத்துவது தனிச்சிறப்பு. சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினால் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்னதானம் வழங்கிய பெருமை வந்து சேரும் என்பது ஐதீகம். அன்னாபிஷேகம் அன்று அன்னம் சமைத்து அதை சிவலிங்கம் முன் படைத்து அதன்மீது மலர்கள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் கட்டளைதாரர் எம்.எஸ்.பி.பிச்சைக்கண்ணு செட்டியார் - கல்யாணி அம்மாள் குடும்பத்தினர் முன்னிலையில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம் ஆகிய வைபவங்களை நாரம்புநாதபட்டர், தூத்துக்குடி விக்னேஷ்பட்டர் ஆகியோர் நடத்தினர். பின்னர் சிவபெருமான் முழுவதும் அன்னம் வைக்கப்பட்டது. அன்னாபிஷேக காட்சியில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அன்னம் வசந்த மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கும், சிவசைலம் அவ்வை ஆசிரம குழந்தைகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னாபிஷேக விழாவில் எம்.எஸ்.பி.கணேசன், செண்பகம் கணேசன், மாதவி சபாபதி, இன்ஜினியர் மீனாபிரதீபா, முத்துசெல்வி சங்கரகுமார், பணிநிறைவு மின்வாரிய பொறியாளர் ஐயம்பெருமாள், சிவசைலம் சாந்தி காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணன் உட்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.