வானுார: கிளியனூரில் நடந்த கூத்தாண்டவர் தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வானுார் அடுத்த கிளியனூரில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன், கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 10ம் தேதி அரக்குமாளிகை உற்சவமும், 11ம் தேதி பகாசூரனை சம்ஹாரம் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம், கரக உற்சவம், பாரதம் படித்தல், மாடுமிரட்டல், அரவான் கடபலி, தபசு உற்சவமும், அம்மனுக்கு தீ மிதித்தல் நடந்தது. நேற்று முன்தினம் கூத்தாண்டவர் சாமிக்கு இரவு மாங்கல்யம் கட்டுதல், சிரசு ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு, கூத்தாண்டவர் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மாலை 5.00 மணிக்கு அழுகளம் வந்தடைந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.