பதிவு செய்த நாள்
18
மே
2017
12:05
உத்திரமேரூர்: எடமச்சியில், பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து வரும், சவுமிய நாராயண பெருமாள் கோவிலை பாதுகாக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த, சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால், கட்டடம் நாளுக்கு நாள் பலவீனமடைந்து உறுதி தன்மையை இழந்து வருகிறது. கோவில் நுழைவாயில் பகுதியின் சுற்றுச்சுவர் இடிந்துள்ளதால், இரவு நேரங்களில் இக்கோவில் கால்நடைகளின் தஞ்சமாகிறது. இக்கோவில் கருவறையில், பெருமாளுடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்கள் இணைந்திருப்பது சிறப்பம்சமாகும். 15 ஆண்டுகளுக்கு முன், கோவிலில் தினமும் பூஜை நடந்தது. தற்போது, விசேஷ நாட்களில் மட்டும் கோவில் திறக்கப்பட்டு, பூஜை நடக்கிறது. எனவே, இக்கோவிலில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, தினமும் பூஜைகள் நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என பக்தர்கள் தெரிவித்தனர்.