பதிவு செய்த நாள்
18
மே
2017
12:05
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் களில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா, வரும், 31ல் துவங்குகிறது. அன்றிரவு, காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், கிராம சாந்தியும் நடக்கிறது. ஜூன் 1ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில்களில், கொடியேற்றம் நடக்கிறது. வரும், 2ம் தேதி, சிறப்பு அபிஷேகம், சுவாமி புறப்பாடு; 3ம் தேதி, அதிகார நந்தி, சேஷ வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, 4ம் தேதி, கற்பக விருட்ஷ வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 5ம் தேதி மாலை, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு மற்றும் எம்பெருமான் கருட சேவை புறப்பாடு நடக்கிறது. ஜூன், 6ம் தேதி, திருக்கல்யாணம்; 7ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, உற்சவமூர்த்திகள், திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 3:00 மணிக்கு, ஈஸ்வரன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, சிறப்பு அபிஷேகம்; மதியம் , 3:00 மணிக்கு, பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. வரும், 12ம் தேதி காலை, மஞ்சள் நீராட்டு, மலர்ப்பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி மாலை, 6:30க்கு, விடையாற்றி உற்சவத்துடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கு தேர்கள் தயார் படுத்தும் பணி துவங்கியுள்ளது. நேற்று காலை, ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில் தேர், முகூர்த்தக்கால் பூஜை நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்றது.