பதிவு செய்த நாள்
19
மே
2017
11:05
நாகப்பட்டினம்: நாகூர் சீராளம்மன் கோவில் திருவிழாவில், பூச்சொரிதல் ஊர்வலத்திற்கு, ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பதற்றம் ஏற்பட்டது. இதனால், ௧,௦௦௦ போலீசார் பாதுகாப்புடன், ஊர்வலம் நடந்தது. நாகை அடுத்த நாகூர், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், பழமையான சீராளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நாகூர், நாகநாதர் கோவிலில் இருந்து பெண்கள், பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து சென்று, சீராளம்மன் கோவிலை அடைந்ததும், பூச்சொரிதல் வைபவம் நடைபெறும்.
கடந்த ஆண்டு, பூச்சொரிதல் ஊர்வலம் செல்லும் பாதையில், ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பதற்றம் ஏற்பட்டது. போலீசார் தலையீட்டிற்கு பின், ஊர்வலம் நடந்தது. இந்த ஆண்டும், பூச்சொரிதல் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, கலெக்டர் மற்றும், எஸ்.பி., தலைமை யில், அமைதி பேச்சு நடந்தது. இதில், அமைதியான முறையில், ஊர்வலம் நடத்த உத்தரவிடப்பட்டது. எனினும், அப்பகுதியில் பதற்றம் நிலவியதால், அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில், திருச்சி, ஐ.ஜி., வரதராஜு, டி.ஐ.ஜி., செந்தில்குமார் தலைமையில், ௦ போலீசார், ஊர்வலம் செல்லும் சாலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு நாகூர், நாகநாதர் கோவிலில் இருந்து, பட்டினச்சேரி கிராம பஞ்சாயத்தார் தலைமையில், 2,500 பெண்கள், பூத்தட்டுகளை சுமந்து, ஊர்வலமாக சென்றனர். இரவு, 7:00 மணிக்கு ஊர்வலம், கோவிலை அடைந்ததும், பூச்சொரிதல் வைபவம் நடந்தது. நாகூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.