பதிவு செய்த நாள்
19
மே
2017
11:05
பெரம்பலுார்: அருள்மிகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், வைகாசி தேரோட்டம் நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், வைகாசி பெருந்திருவிழா கடந்த 2ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. 9ம் தேதி சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் உள்ள செல்லியம்மன் மற்றும் மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 10ம் தேதி சந்தி மறித்தல், 11ம் தேதி குடி அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
12ம் தேதி சிவ வழிபாடு, 17ம் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீதியுலா, திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட விழா நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. நேற்று காலை 10:30 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருச்சி, சென்னை, மதுரை, கோவை, விழுப்புரம், சேலம், அரியலுார் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக நேற்று மாலை 3:00 மணியளவில் திருத்தேர் நிலை நின்றது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், 22ம் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியும் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.