பதிவு செய்த நாள்
20
மே
2017
11:05
வேலுார்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், அமர்வு தரிசனத்துக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிப்பது, நேற்று முதல் அமலுக்கு வந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பொது தரிசனம் மற்றும் 20 ரூபாய், 50 ரூபாய் கட்டண தரிசனங்கள், தற்போது நடைமுறையில் உள்ளன. அமர்வு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், அபிஷேகத்துக்கு கட்டணம் செலுத்தியவர்கள் ஆகியோர், அமர்வு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது, அமர்வு தரிசனத்தை முறைப்படுத்தும் வகையில், நபர் ஒருவருக்கு, 250 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மூன்றாம் பிரகாரத்தில் கொடி மரம் அருகே, அமர்வு தரிசனத்துக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய நடைமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதிகபட்சம், மூன்று நிமிடங்கள் வரை அமர்வு தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தரிசனம் முடிந்த பின், பிரசாத பை வழங்கப்படும். அதில், இரண்டு லட்டு, இரண்டு முறுக்கு, இரண்டு அதிரசம் ஆகியவை இருக்கும். பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில், அமர்வு தரிசனம் கிடையாது. அமர்வு தரிசனத்துக்கு, பக்தர்களிடம் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து, இதில் மாற்றங்கள் செய்வது குறித்து, கோவில் நிர்வாகம் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.