பதிவு செய்த நாள்
22
மே
2017
11:05
திருத்தணி: திரவுபதியம்மன் கோவில்களில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். திருத்தணி அடுத்த, மேல்திருத்தணி மற்றும் எஸ். அக்ரஹாரம், மதுரா குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில்களில், 4ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. தினமும் காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை , மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு, நாடகமும் நடந்து வந்தது. இது தவிர, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, காலை, 10:00 மணியளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. துரியோதனன் இழந்த சோகத்தில் காந்தாரி துடப்பம், முறத்தால் அங்கிருந்த பக்தர்களை விரட்டி அடித்தனர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து மூலவர் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். தொடர்ந்து வாணவேடிக்கையும் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.