பதிவு செய்த நாள்
22
மே
2017
12:05
ஸ்ரீவில்லிபுத்துார்: கோடைவிடுமுறையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு கேரள பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. ஆண்டாள் கோயில் தங்கவிமான கோபுர கும்பாபிேஷகத்திற்கு பின் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா பக்தர்கள் மற்றும் சபரிமலை பக்தர்கள் வருகையே அதிகளவில் இருக்கும். இதுவும் சீசன் நேரத்தில் தான் இருக்கும். தற்போது கேரள பக்தர்கள் குடும்பத்துடன் கடந்த சில நாட்களாக வந்துசெல்கின்றனர்.
திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குற்றாலம், பாபநாசம் சென்று ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக திருப்பரங்குன்றம், மதுரை, ராமேஸ்வரம் கோயில்களுக்கு செல்கின்றனர். தங்களின் சொந்த கார்கள் மற்றும் சுற்றுலா பஸ், வேன்களில் வரும் கேரள பக்தர்கள் ஆண்டாள் மற்றும் வடபத்ரசயனர்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து, ராஜகோபுரம் அருகே குடும்பத்துடன் நின்று அலைபேசியில் போட்டோ எடுத்து செல்கின்றனர்.
இதேபோல் திருநெல்வேலி, மதுரை மாவட்ட பக்தர்களும் ஒருநாள் சுற்றுலாவாக காலை 8.30 மணி வரும் மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் குடும்பத்துடன் வந்து, ஆண்டாள் கோயில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில்களுக்கு சென்று மாலையில் பாசஞ்சர் ரயிலில்தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர். இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பக்தர்கள் சிலம்பு எக்ஸ்பிரசில் வந்து ஸ்ரீவில்லிபுத்துார் கோயில்களில் தரிசனம் செய்து, மாலையில் அதே ரயிலில் சொந்த ஊர் செல்கின்றனர். வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்தால் எதிர்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ஒரு சுற்றுலா நகராக மாறும் என்பது ஸ்ரீவில்லிபுத்துார் மக்களின் எதிர்பார்ப்பு.