அம்பிகையை பூஜை செய்வதற்குமுன் நமது உடலிலுள்ள முக்கியமான பத்து உறுப்புகளை நாமே பூஜை செய்து கொள்ள வேண்டும். இதை தசஅங்கபூஜை என்று கூறுவார்கள். இது அங்க சுத்தியான ஆத்ம பூஜையாகும். நமது உறுப்புகளால் பல தகாத செயல்களைச் செய்கிறோம். குறிப்பாக கைகளால் செய்கிறோம். எனவே அந்த கறைபடிந்த கையால் அம்பாளை பூஜை செய்வது முறையல்ல. அதுமட்டுமல்ல; நமது கண், காது, வாய் என்று எல்லாமே அந்த தகாத செயல்களுக்குத் துணைபோகின்றன. எனவே நமது உடலை முதலில் பூஜை செய்து கொள்ள வேண்டும். வேதம் படித்தவர்களைக் கொண்டு இந்த பத்து அங்க பூஜையை நாம் செய்துகொண்ட பின்பே புனிதமான உடலுடன் அம்பாளை பூஜிக்க வேண்டும். இப்படிச் செய்தால் தேவியானவள் தனது பத்து விரல்களால் நம்மை ஆசீர்வதித்து பல நன்மைகளைப் கொடுப்பாள். விஜயதசமியன்று ஒரு ஏழைப்பெண்ணுக்கு பட்டுப்புடவை தானம் செய்யவேண்டும். இந்த தானம் ஒரு மிகப்பெரும் பாக்கியமாகும். பட்டுப்புழுக்களை கொதிக்கின்ற நீரில் உயிரோடு போட்டுக் கொன்று, அதற்குப் பின் அதன் இழைகளை எடுத்து பட்டுப் புடவை நெய்கிறார்கள். இதனால் அந்தப் புழுக்களின் வேதனை அந்தப் புடவையில் நிறைந்திருக்கும். அப்படி வேதனை நிறைந்த ஒரு பட்டுப்புடவையை உடுத்திக்கொள்வதால் நம் வாழ்க்கையிலும் வேதனைகள் சூழும். பட்டுப்புடவைகளில் உயிர்கொலை இருப்பதால் அதற்குப் பிராயச்சித்தமாக விஜயதசமியன்று ஒரு பட்டுப் புடவையை ஏழை எளியவர்களுக்கு தானமாகக் கொடுத்து நமது பாவத்தை நீக்கிக்கொள்ளலாம்.
ஒரு ஏழைக்கு தானம் செய்தால் நமது பாவம் நீங்கும்போது, அந்தப் புடவையை பெற்றுக்கொள்ளும் பெண்ணுக்குப் பாவம் போய்ச்சேராதா என்ற கேள்வி எழுகிறது. தனக்கு ஒரு பட்டுப்புடவை கிடைக்காதா? நாமும் பட்டுப்புடவை கட்டமாட்டோமா என்று ஏங்கித்தவிக்கும் ஒரு ஏழை அது கிடைத்தவுடன் நிறைந்த மகிழ்ச்சியடைகிறாள். அடுத்து, ஏழையை மகிழச்செய்த தர்மம் கருதி. அவர்களின் ஆத்ம திருப்தி கருதி அம்பிகையானவள் தர்மதேவதைகளை அழைத்து அந்த தர்மத்தையும் அதிலிருக்கும் பாவத்தையும் ஏற்றுக்கொண்டு அவற்றைத் தன்னிடத்தே சேர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறாள். தர்மதேவதைகளும் அவ்வாறே செய்ய அந்தப் பட்டுப்புடவையில் உயிர்நீத்த புழுக்களுக்கு மோட்சத்தை அளிக்கிறாள் அம்பிகை. அதுமட்டுமல்ல; மோட்சம் பெற்ற அந்த பட்டுப்புழுக்கள் யார் பட்டுப் புடவையை தானம் செய்தார்களோ அவர்களை ஆசீர்வதிக்கும் அந்த அசீர்வாதத்தால் அக்குடும்பம் மேல்நிலைக்கு வந்து மகிழ்வோடு வாழும். அதேபோல, விஜயதசமியன்று அம்பிகைக்கு பட்டுப்புடவை சாற்றி பூஜை செய்தாலும் இதேபலன் கிடைக்கும். இப்படி பலரது நன்மைகளைக் கருதி அக்காலத்தில் விஜயதசமியைக் கொண்டாடினார்கள்.