சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவையொட்டி கோயில் விநாயகர் மே 18ம் தேதியில் இருந்து 27ம் தேதிவரை 10 நாட்கள் சிங்கம்புணரி சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மே 28 ம் தேதி விநாயகர் மீண்டும் கோவிலுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, 10 நாள் திருவிழா தொடங்கியது. காலை 10:00 மணிக்கு சந்திவீரன் கூடத்திலிருந்து புறப்பட்ட விநாயகர் 12:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 1.30 மணிக்கு பிடாரியம்மன் சன்னிதி முன்பாக உள்ள வெள்ளி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அம்மனுக்கு காப்புக்கட்டப்பட்டது.
பிற்பகல் 2:20 மணிக்கு கோவில் பூஜகர்கள் ஓலைச்சுவடி படித்தனர். பிறகு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிங்கம்புணரி நாட்டார்கள் முன்னிலையில் சேவுகப்பெருமாள் அய்யனாருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. 10 நாள் மண்டகப்படியாக நடைபெறும் இந்த திருவிழாவின் 5ம் திருநாளன்று திருக்கல்யாண உற்சவமும், 6ம் திருநாளன்று கழுவன் திருவிழாவும் நடைபெறும். 9 ம் திருநாளான ஜூன் 5 ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இத்தேரோட்டத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய்களை தேரடிப்படிகளில் வீசியெறிந்து உடைப்பர். 10ம் திருநாளான்று பூப்பல்லக்கு உற்சவம் நடைபெறும்.