பதிவு செய்த நாள்
31
மே
2017
11:05
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சேக்கிழார் பெருமான் மற்றும் நமி நந்தியடிகள் குரு பூஜை விழா நேற்று நடந்தது. நாயன்மார்களின் சிறப்பு வாய்ந்தவரான சேக்கிழார், 12ம் நுõற்றாண்டில் வாழ்ந்த சிவனடியார். இரண்டாம் குலோத்துங்க சோழன் அரசில், முதன்மை மந்திரி; திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர். தில்லையில், பெரிய புராணம் பாட, ‘உலகெல்லாம்’ என சிவபெருமானே அடி எடுத்துக் கொடுத்தார். பெரியபுராணத்தை இயற்றி, சிவனடியார்களின் பெருமையை உணர்த்தியவர். திருப்பூர் அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், சேக்கிழார் குரு பூஜை நேற்று நடந்தது. ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சேக்கிழாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
நமி நந்தி அடிகள் குரு பூஜை : சமணர்கள் எண்ணை தர மறுத்ததால், குளத்து நீரை கொண்டே விளக்கு எரித்த நாயனாரான, நமிநந்தியடிகள் குரு பூஜையும் நேற்று நடந்தது. சோழநாட்டை சேர்ந்த நமி நந்தியடிகள், திருவாரூர் அறநெறியப்பரையும், அம்மையையும் வணங்கிக் கொண்டிருந்தார். எண்ணையில்லாமல் விளக்கு அணையும் நிலையில் இருந்ததால், அருகேயுள்ள வீட்டில் எண்ணை கேட்டார். அந்த வீடு, சமணர் வீடு என்பதால், ‘நெய் இல்லை, நீரை அள்ளி எரிப்பீராக’ என்றனர். மனமுடைந்த அடிகள், சிவபெருமானிடம் வீழ்ந்து, வணங்கினார். சுவாமி, ‘அருகேயுள்ள சங்கு தீர்த்த குளத்தில் நீர் எடுத்து வந்து, விளக்கேற்று’ என்று கூறி மறைந்தார். அவ்வாறு, இரவு முழு வதும் கோவில் வளாகத்தை, ஒளிரச்செய்தார். இச்சிறப்பு பெற்ற, நமி நந்தியடிகளின் குருபூஜையும் நேற்று நடந்தது.