பதிவு செய்த நாள்
14
நவ
2011
11:11
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.செங்கல்பட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு சமீபத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்தது. கோவில் வளாகத்தில் புதிதாக, முருகர் சன்னதி, நவக்கிரக சன்னதி கட்டப்பட்டது. புதிய கொடி மரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு, யாகசாலையிலிருந்து, புனித நீர் எடுத்துவரப்பட்டு, கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா, செயல் அலுவலர் சந்திரசேனா, தக்கார் மாதவன், நகராட்சி தலைவர் அன்புச் செல்வன், மூத்த வக்கீல் பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.