பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
01:06
ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கிய நிலையில், பாதுகாப்பு பணிக்காக, 16 ’சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 190 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஓசூரில் உள்ள பழமையான சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான விழா நேற்று காலை, 7:00 மணிக்கு, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவற்றுடன் துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, இரவு, 8:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று (ஜூன், 3) காலை, 8:00 மணிக்கு, இரண்டாவது கால யாக சாலை பூஜை, மாலை, 6:00 மணிக்கு மூலவர், மரகதாம்பிகை அஷ்டபந்தனம் சாத்துதல், இரவு, 8:00 மணிக்கு மூன்றாவது கால யாக சாலை பூஜை, நாளை (ஜூன், 4) அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காவது கால அனுப்தே யாக சாலை பூஜை, 7:00 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், 8:00 முதல், 8:30 மணி வரை, அனைத்து பரிவாரமூர்த்திகள், அம்பாள், மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், கோவிலில் பாதுகாப்பிற்காக, 16 ’சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 190 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.