சிவகங்கை அருகே சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2017 12:06
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழர் கால பழமையான சிவன் கோயில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை அருகே மேலப்பூங்குடி வெள்ளிமலை அடிவாரத்தில் பழமையான கோயில் ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது. இங்கு லிங்கம் இல்லாத பழமையான பீடம், தலை இல்லாத அக்னி பகவான் சிலை (ஆட்டுகடா வாகனம்), நந்தி போன்றவை சிதைந்து காணப்படுகின்றன. இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயமாக பானை ஓடுகள் பரவி கிடக்கின்றன.
அதனருகே பெரிய கல்தொட்டியும், ஸ்ரீதேவி சிலை உடைந்த நிலையிலும் காணப்படுகின்றன. சிவன் கோயில் எல்லைக்கற்களான சூலைக்கல் நான்கு திசையிலும் நடப்பட்டுள்ளது. இக்கோயில் பத்தாம் நுாற்றாண்டு சோழர் காலத்தில் கட்டப்பட்டு முகமதியர் படையெடுப்பால் அழிக்கப்பட்டது என்பதற்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இக்கோயிலில் தங்கத் தேர் ஓடியதாக கூறப்படுகிறது. இக்கோயில் இருக்கும் பகுதி பூங்குடி நாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. தொல்லியன் ஆய்வாளர் கீழக்கரை உ.விஜயராமு கூறியதாவது: சோழர்காலத்திற்கு பின் இப்பகுதியை வீர வல்லாளன் ஆட்சி செய்துள்ளார். தனக்கு தலைசிறந்த மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக தனது ராஜ்யத்தின் வருவாயில் ஒரு பகுதியை சிவனடியாருக்கும், சிவன் கோயிலுக்கும் செலவு செய்துள்ளார். அவரே சிவன் கோயிலுக்கு தங்கத் தேர் கொடுத்துள்ளார். இவர் அக்னி குலத்தை சேர்ந்தவர் என்பதால் சிவன் கோயிலில் அக்னிதேவருக்கும் பூஜை நடந்துள்ளது.
மூலவருக்கு பாலாபிஷேகம் செய்ய வளர்க்கப்பட்ட பசுக்கள் தண்ணீர் குடிப்பதற்கு பெரிய கல்தொட்டி உருவாக்கி உள்ளனர். இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் மூன்று கி.மீ., சுற்றளவில் இருந்துள்ளது. பெரிய அளவில் தேரோட்டம் நடந்துள்ளது. வல்லாளனை கி.பி. 1342 ல் சூழ்ச்சியால் மதுரை சுல்தான் கொன்றுள்ளார். எதிர்பார்த்த செல்வம் கிடைக்காததால் சிவன் கோயிலை சூறையாடியுள்ளான். தங்கத் தேரை பெரி கல்தொட்டி அருகே மக்கள் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. தலையில்லாத அக்னி தேவனின் சிலையை தற்போது மூக்குடைந்த பிள்ளையார் என, கூறி வருகின்றனர். மூன்று கண்மாய் கரைகள் இணையும் இப்பகுதியில் இந்த சிலை இருப்பதால் மூக்கரை பிள்ளையார் என கூறுகின்றனர். இப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்தால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரும், என்றார்.