பதிவு செய்த நாள்
06
ஜூன்
2017
12:06
ஆர்.கே.பே ட்டை: தர்ம நெறிகளை போதிக்கும் மகாபாரத இதிகாச கதையை கேட்டும், கண்டும் அதை நாமும் வாழ்வில் கடை பிடித்தால், மழை பெ ய்யும், நாடு செழிக்கும், வாழ்வு வளம்பெறும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையிலேயே, கிராமங்களில் ஆண்டு தோறும் கோடையில், தீமிதி திருவிழா எனப்படும் மகாபாரத கதை, சொற்பொழிவாகவும், தெருக்கூத்தாகவும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆர். கே. பேட்டை அடுத்த, செல்லாத்தூரில், 25ம் தே தி, பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியுடன் தீமிதி திருவிழா களை கட்டியது. கிருஷ்ணன், தூது, குறவஞ்சி, கர்ண மோட்சம் என, பல்வேறு தெருக்கூத்து நாடகங்கள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் உச்சகட்டமான தீமிதி திருவிழா நடந்தது. இதற்காக, செல்லாத்தூர், ஆர்.கே.பே ட்டை, ஸ்ரீகிருஷ்ணாபுரம், கிருஷ்ணா குப்பம் மேடு, வேலன்கண்டிகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்தனர். மாலை 6:00 மணிக்கு, அக்னி குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, மாலை 5:00 மணிக்கு பக்தர்களின் வேண்டுதலின் படி, ஆர்.கே.பே ட்டையில் பலத்த மழை பெய்தது.ஆனாலும் அக்னி குண்டம் தொடர்ந்து அனல் வீசிக்கொண்டிருந்தது. இரவு 7:00 மணிக்கு, திரவுபதியம்மன் மற்றும் சக்தி கரகம் எனப்படும் பிரதான பூங்கரகம் ஏந்திய பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவின் இறுதி நாளில் பக்தர்களின் வேண்டுதலின் படி, மழை பெய்தது தெய்வ செயல் என, கிராமத்தினர் புளகாங்கிதம் அடைந்தனர். நேற்று, காலை 10:00 மணிக்கு, தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இரவு 7:00 மணிக்கு திரவுபதியம்மன் வீதியுலா எழுந்தருளினார்.