பெருந்துறை: காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் கோவில் குண்டம் விழா, நேற்று நடந்தது. வெள்ளை ஆடை அணிந்து, பக்தர்கள் தீ மிதித்தனர். பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், சீதேவியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்திருவிழா, மே 24ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 2ல் கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராஜகோபுரம் முன்புறம் அமைக்கப்பட்ட, 60 அடி நீள குண்டத்தில், குதிரை துலுக்குதல் நடைபெற்றவுடன் தீ மிதிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரியை தொடர்ந்து, விரதம் மேற்கொண்ட பக்தர்கள், வெள்ளை ஆடை அணிந்து குண்டம் இறங்கினர். காஞ்சிக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மற்றும் நாளை தேர்த்திருவிழா நடக்கிறது. வரும், 11ல் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது.